பாணன் என்பது கிமு மூன்றாம் நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்த ஒரு இனக்குழுவை சுட்டும் பெயர். தமிழ் சங்க இலக்கியத்தில் வரும் பாத்திரம் பாணன். ஒரு குழுவாக புரவலர்களை சென்று சந்தித்து அவர்கள் முன் தங்கள் கலைத் திறமைகளை காட்டி பரிசில் பெற்று வருவது பாணர்களின் தொழில். இசைக்கருவிகளை சுமந்து தங்களுடைய புரவலர்களை தேடித்திரிபவர்கள், ஆடியும் பாடியும் அரசர்களிடம் பெரிய பரிசுகளை பெறும் திறமை உடையவர்கள், தாங்கள் தலைவனாக ஏற்றுக்கொண்டவர்களை ஊரெல்லாம் பாடிப்பரவுபவர்கள், தலைவனுக்காக தூது செல்பவர்கள் என்ற பல  உருவகங்கள் இலக்கியங்களில் காட்டப்படுகின்றன. ஒரு பண்பாட்டில் இயல்பான பாடகர்களாக தோன்றி உச்சநிலைக்கு சென்று பின் மெல்ல அவர்கள் புலவர் மரபின் முன் வீழ்ச்சியடைந்ததன் சித்திரம் சங்க இலக்கியங்களில் கிடைக்கிறது.

மேல்சொன்னவற்றால்  பாணர்களுடன் நாடோடிகளாக ஜிப்ஸிகளையும், இனக்குழுப்பாடகர்களையும் ஒப்பிடத்தோன்றலாம். ஆனால் அது ஒரு முழுமையான புரிதலாக இருக்காது. பாணர்களின் இயல்பின் ஒரு பகுதிதான் அவையெல்லாம். தன்னுடைய கலையை மட்டுமே தன்னுடைய உயிர்மூச்சாக கருதும் ஒருவன். அதன்பயனாக கிடைத்த பொருளை சேர்த்து ஓரிடத்தில் வசதியாக அமையாதவன். பெற்ற பொருளை காக்கத்தெரியாது மீண்டும் மீண்டும் தனது பறையை தோளில் மாட்டிக்கொண்டு அலைபவன். இந்த அலைக்கழிப்பும் நிலையின்மையும் கலைஞர்களின் தன்னியல்புகள். புறச்சூழலால் மட்டுமல்ல அகத்துக்குள்ளும் கலைஞர்கள் அலைக்கழிப்பு கொண்டவர்கள் இல்லையா.

நவீன தமிழ் இலக்கியவாதிகளில் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் மீண்டும் மீண்டும் சங்க இலக்கியம் காட்டும் பாணர்களை குறித்து பேசியும் எழுதியும் பாணர் என்னும் உருவகத்தை தமிழ் வாசகர்களிடையே நிலை நிறுத்தினார். எழுத்தாளர் ஜெயமோகன் பாணர்களை தொடர்ந்து தனது புனைவுகளில் எழுதி எழுதி அவர்களை தூலமாக உலவச்செய்தார். இந்த உலகம் வேண்டாம் எனும்போதெல்லாம் வெண்முரசு நாவலில் ஜெயமோகன் உருவாக்கி வைத்திருக்கும் சூதர் உலகில்  சென்று தங்கிவிட விரும்புகிறேன். இவர்கள் இருவரும் இந்த எளியவனின் வணக்கத்திற்குரியவர்கள், அவர்களன்றி தமிழில் பாணன் என்னும் சொல் எங்களுக்கு பொருள்பட்டிருக்காது.

பாணன் எனும்பெயர் பறையொலியை யாழிசையை சுட்டுகிறது. பாணன் எனும் சொல் தன்னியல்பாக எழும் பாடல் வரிகளை சொல்கிறது. பாணன் எனும் சொல் சிறகசைவின் சுதந்திரத்தை காட்டுகிறது, பலவேறு நிலங்களினூடாக பயணிக்கிறது, எளிமையாக நிலைக்கிறது, தன்னிரக்கத்தை கோருகிறது, பெரும் அரசர்களை புறக்கணித்து பயணிக்கிறது, இவற்றினூடாக பாணன் என்ற சொல் ஒரு தன்மையாக மாறுகிறது. அந்த தன்மையை நான் சூடிக்கொள்வதால் நான் பாணனாகிறேன். எங்கும் செல்பவன், பாடுபவன், கனவுகளை துரத்தி ஓடுபவன், கலைஞர்களுடன் மட்டுமே இயல்பாக இருப்பவன்.  நான் பாணன், நான் பாணன்.